சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்
பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை தொடக்கி வைத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி
சிவகங்கை மாவட்டம், பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திடும் விதமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
தமிழக அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிற்கு தடை விதித்து, கடந்த 01.01.2019 முதல் அந்நடைமுறை அமலில் உள்ளது.
வருங்கால சந்ததியினர்களின் நலனுக்காகவும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பினைத் தடுக்கப்பதற்கும், பாரம்பரிய துணிப்பைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரவும், தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் , கடந்த 23.12.2021 அன்று “மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை தொடங்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரத்தினை பொதுமக்களிடையே பயனுள்ளதாக உருவெடுக்கும் நோக்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் பொதுமக்கள் மஞ்சப்பைகளை பயன்படுத்துவது ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டு, அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தில் பத்து ரூபாய் நாணயங்களாகவோ அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயங் களாகவோ அல்லது ஐந்து 2 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது பத்து 1 ரூபாய் நாணயங்களாகவோ செலுத்தி, பொது மக்கள் மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம். இந்த இயந்திரம் 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, அரசின் அறிவுரையின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பாரம்பரிய வகையில் துணிப்பைகளின் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்திட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கூ.பொ) க.இராஜராஜேஸ்வரி, உதவிப்பொறியாளர் அ.சௌமியா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu