சிவகங்கை அருகே நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை அருகே நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஆட்சியர் ஆய்வு
X

பயிற்சி மையத்தை  ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி.

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு பயிற்சி வழங்குவதற்கான மையத்தினை, மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், அமராவதிபுதூர் கிராமிய பயிற்சி மையத்தில் ஏற்படுத்தப்படவுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தமிழகத்தில், மேல்நிலை இரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 23ம் தேதி தேர்வு நிறைவு பெறுகிறது. மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு நீட் தேர்வில் தகுதி பெறுவது தற்போது அடிப்படை என்பதால், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராகும் வண்ணம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது.

நீட் தேர்வில் பங்குபெற விண்ணப்பிக்க 20ம் தேதி அன்று இறுதிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களை கணக்கிட்டு அவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வருகின்ற 28ம் தேதி சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நீட் தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்து மாணாக்கர்களையும் அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டு அவர்களின் விருப்பத்தின் பேரில் ஜூன் 1ம் தேதி முதல் நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.

காரைக்குடி வட்டம், அமராவதிபுதூர் கிராமிய பயிற்சி மையத்தில் நீட் தேர்விற்கான பயிற்சி மையம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி, படிப்பதற்கான புத்தகங்கள், தேர்விற்கு தயாராகுவதற்கு தேவையான மாதிரி வினா விடைத்தாள்கள் போன்றவை இலவசமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படவுள்ளது. இதில் 150 முதல் 200 மாணாக்கர்கள் வரை தங்கிப் பயில்வதற்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

மாணவ, மாணவியர்கள் தங்கிப் பயில்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி போன்றவற்றுடன் தினந்தோறும் காலை முதல் மாலை வரை பயிற்சி வகுப்பு நடத்திடவும், நடத்திய பயிற்சி வகுப்புகளுக்கு மாதிரித் தேர்வுகள் நடத்திடவும், அது குறித்த வினாத்தாட்கள் தயாரிக்க ஆசிரியர் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி, அவர்கள் பயிலுவதற்கு தேவையான கல்வி கட்டணங்களையும் அரசே செலுத்தி வருகிறது. இதுபோன்று அரசால் ஏற்படுத்தப்படுகின்ற சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்ந்து உயர்படிப்புகளில் பயிலுவதற்கு தேவையான நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இரா.ஆ.சிவராமன், கிராமிய பயிற்சி மைய இயக்குநர் பெ.ஆறுமுகம், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் ச..பிரபாகரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ந.மங்களநாதன், உதவி இயக்குநர் த.ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!