சிவகங்கை அருகே கண்மாய் தூர்வார் பணி: தொடங்கி வைத்த ஆட்சியர்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட அலவாக்கோட்டை கிராமத்தில், அலவாக்கோட்டை கண்மாயின் உபரி நீரிலிருந்து ஆரம்பமாகும் சருகனி ஆற்றை தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வள ஆதாரங்களை சீரமைத்து நிலத்தடி நீரை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில், மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாகவும், வரத்து வாய்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அரசுடன் இணைந்து நீர்நிலைகளை பாதுகாத்திட ஊர் பொதுமக்கள், தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்து, எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ள வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நீர்நிலைகளை சீரமைக்கும் சிறப்பான பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இன்றைய தினம் சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட அலவாக்கோட்டை கிராமத்தில், அலவாக்கோட்டை கண்மாய் உபரி நீரிலிருந்து ஆரம்பமாகும் சருகனி ஆற்றினை தூர்வாரும் பணியானது சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி நிறுவனர் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மட்டுமன்றி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும், உறுதுணையாக இருந்திடும் வகையிலும், மேற்கண்ட நிறுவனமானது நீர்நிலைகளை பாதுகாத்திட முன்வந்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.
இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள நீர் நிலைகளை சீரமைப்பதற்கு அரசுடன் இணைந்து செயல்பட தன்னார்வலர்கள் ஆர்வமுடன் வரவேண்டும். மேலும், இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இப்பணியானது, பெரியார் பிரதான கால்வாயின் 48வது மடையின் 12வது பிரிவின் கடைசி மடை கண்மாயாகும்.
மேலும், சருகனி ஆற்றில் மொத்தமுள்ள 11 அணைக்கட்டுகள் மூலம் 7810.65 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மொத்தம் 63 கி.மீ நீளமுள்ள சருகனி ஆற்றின் படுகையானது அலவாக்கோட்டை கண்மாயில் தான் தொடங்குகிறது. இக்கண்மாயின் வாயிலாக 843.46 Cusecs அளவில் பாசன நீர் வெளியேறி, பல்வேறு அணைக்கட்டுகளின் வாயிலாக விவசாய நிலங்களுக்கு உபயோகிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், பொதுமக்கள், நீர் நிலம் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, சிவகங்கை மாவட்டம் மற்றும் வட்டத்தில் உள்ள அலவாக் கண்மாயின் உபரி நீர் செல்லும் பாதையில் உருவாகி சிவகங்கை வட்டம், காரைக்குடி வட்டம் மற்றும் தேவகோட்டை வட்டத்தின் வழியாக இராமநாதபுரம் மாவட்டத்தின் வழியாக சென்று கடலில் கலக்கும் சருகனி ஆற்றின் பரப்பினை நில அளவை செய்து, வேளாண்மை பொறியியல் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு, ஆற்றின் நீர்வழிப்பாதையிலுள்ள புதர்கள் மற்றும் சீமைக் கருவேல செடிகளை அகற்றுதல், கரைகளைப் பலப்படுத்துதல், மதகுகளை சரிசெய்தல் மற்றும் புனரமைத்தல், கண்மாய்களை தூர்வாருதல், நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் அணைக்கட்டின் தலைமதகு மற்றும் மணற்போக்கிகளின் சட்டர்களை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் பொதுமக்கள், தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளின் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் பாசன நீரானது தடையின்றி செல்லவும், கரைகள் பலப்படுத்தப்பட்டும், அணைக்கட்டுகள் புனரமைப்பதால் நீரின் வெளியேற்றமும் திறன் குறையாமல் இருக்கும்.
இதுபோன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கண்மாய்களை புனரமைப்பதன் மூலம் மழைக்காலங்களில் பெறப்படும் நீரினை விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையிலும், அதனை சேமிப்பதற்கு அடிப்படையாக அமைகிறது.
இதில், கிராமத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும், தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இப்பணிகளை கிராமப் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு, அவ்வாறாக நடைபெற்றும் வரும் பணிகளை பொதுமக்களும் இணைந்து கண்காணித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள சிற்றாறுகள் மற்றும் சிற்றோடைகளை சீரமைக்கும் பணிகளில் இயற்கையை பாதுகாக்க ஆர்வமுள்ள, விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்களது பங்களிப்பினை மாவட்ட நிர்வாகத்தினை அணுகி, மாவட்டத்திலுள்ள நீர் நிலை சீரமைப்பு பணிகளை, மேம்படுத்திட உறுதுணையாக இருந்திட முன் வரலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சேதுபாஸ்கரா வேளாண்மைக்கல்லூரி நிறுவனர் சேது குமணன், நீர் நிலம் பாதுகாப்பு இயக்கத் தலைவர் கிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர்கள் முத்துராமலிங்கம், பிரியதர்ஷினி, வட்டாட்சியர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் செழியன், அலவாக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் பாப்பா பாக்கியம், ஒன்றியக் குழு உறுப்பினர் நதியா மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu