சமத்துவபுரத்தில் சிறுவர் பூங்கா: அமைச்சர் திறப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டியில் உள்ள சமத்துவபுரத்தில் சிறுவர் பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிறுவர் பூங்காவினையும், மற்றும் குமாரப்பேட்டை கிராம ஊராட்சியில் ரூ.07.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகூடல்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிறுவர் பூங்காவினையும், மற்றும் குமாரப்பேட்டை கிராம ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து பேசியதாவது:
தரப்பினரும் ஏற்றத்தாழ்வின்றி சமமான முறையில் வசித்திடும் பொருட்டும், முன்மாதிரியான கிராமத்தினை உருவாக்கிட வழிவகை ஏற்படுத்திடும் பொருட்டும், வீடு இல்லாதவர்களுக்கும் கான்கிரீட் வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், சாதிமத பேதமின்றி, அமைதிப் பூங்காவாக உருவெடுக்கும் நோக்கிலும், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக, தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டம் திகழ்ந்தது.
டாக்டர்.கலைஞர், தந்தை பெரியார் சமத்துவபுர திட்டத்தினை ஏற்படுத்தினார்கள். அவ்வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், தந்தை பெரியார் சமத்துவபுர திட்டத்திற்கு தற்போது புத்துயிர் ஊட்டியுள்ளார்கள். கடந்த காலங்களில் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படாத வீடுகளை, தகுதியான பயனாளிகளுக்கு வழங்கிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள்.
சிவகங்கை மாவட்டத்தலுள்ள மொத்தம் 7 சமத்துவபுரங்களை ரூ.9. கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதில், சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரத்திற்கு தனிப்பெருமை உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டதுதான் இந்த சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம். இச்சமத்துவபுரத்திற்கு மேலும்சிறப்பு சேர்த்திடும் வகையில், தற்போது தமிழக அமைச்சர், புதிதாக இடம் பெற்று, சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த (24.12.2022) அன்று இச்சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயன்கள் குறித்து, ஆய்வு மேற்கொண்டார்.
அச்சமயம், இப்பகுதியில் வசித்து வரும் ஒரு குழந்தை தனது தோழிகளுடன் இப்பகுதிக்கு பூங்கா வேண்டுமென, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம், கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில், ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில், இப்பகுதியில் புதிய பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உறுதியளித்து, அதற்கான உத்தரவினை உடனடியாக பிறப்பித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, இப்பகுதியில் கனிம நிதி - மாவட்ட ஒட்டு மொத்த நிதியின் கீழ் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில், பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சிறப்பாக கட்டப்பட்டுள்ள கலைஞர் சிறுவர் பூங்கா, இன்றையதினம் அக்குழந்தைகளின் கரங்களாலே பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரப்பேட்டை கிராம ஊராட்சியிலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-2022-ன் கீழ் ரூ.07.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம், பொதுமக்களின் பயன்பாட்டிற்கென இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்தவற்ககென, டாக்டர்.கலைஞரால், உருவாக்கப்பட்டதுதான் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியாகும். அந்நிதி, டாக்டர்.கலைஞர் அவர்களின் காலத்தில் ரூ.25.00 இலட்சத்திலிருந்து படிப்படியாக உயர்ந்து, தற்போது ரூ.03.00 கோடி அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வழி வகுத்துள்ளார்.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, 121 ஊராட்சிகள், 700-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 6 பேரூராட்சிகளை உள்ளடக்கியதாகும். திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்துப்பகுதிகளிலும் அரசின் நலத்திட்டங்கள் மட்டுமன்றி, வளர்ச்சிப் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபோன்று, பொதுமக்களின் தேவைகள் அறிந்தும், அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மட்டுமன்றி, மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்களின் வசதிக்கென அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தங்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் புதிதாக கட்டமைக்கப் பட்டுள்ள கலையரங்கம், நாடக மேடை, சுகாதார வளாகம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவைகளை முறையாக பராமரிப்பது நமது கடமையாகும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் முனைவர். ஆ.இரா.சிவராமன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.சண்முகவடிவேல், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வெ.மீனாள், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் கோகிலா ராணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆர்.ரவி, திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள் பிரகாசம், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu