நெற்குப்பை பேரூராட்சி நூலகத்தில் முப்பெரும் விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, நெற்குப்பை பேரூராட்சியில் சோம.லெ நினைவு கிளை நூலகத்தில் ஆட்சியர் மதுசூதனரெட்டி தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழா
சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில், சோம.லெ நினைவு கிளை நூலகத்தில் முப்பெரும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்,உலகம் சுற்றிய தமிழர் சோம.லெ அவர்களின் பெயரில், நெற்குப்பை பகுதியில் அமைந்துள்ள அரசு கிளை நூலகத்தில், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு விழா, அறிஞர் சோம.லெ 102 -ஆவது பிறந்த நாள் விழா, சோம.லெ நூற்றாண்டு கலை மற்றும் கல்வி அரங்கம் அமைப்பதற்கான பணி என முப்பெரும் விழாவாக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நெற்குப்பை கிராமத்தில் பிறந்த சோம.லெ அவர்கள் வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, கடந்த 1949-ம் ஆண்டிலேயே அமெரிக்காவைப் பார் என்ற நூலினை எழுதி புகழ்பெற்ற எழுத்தாளர் என்று அனைவராலும் போற்றப்பட்டவர் ஆவார். அவரது குடும்பத்தினர்கள் தற்போதும் இக்கிராமத்தின் பல்வேறு மேம்பாட்டு பணிக்கு அரசுடன் இணைந்து உறுதுணையாக இருந்து வருகிறார்கள். புத்தகம் ஒன்றே நமது வாழ்க்கையில் அடிப்படையாகவும், தங்களது அறிவுத்திறனையும் மேம்படுத்திட முடியும் என்பதனை கருத்தில் கொண்டு, நெற்குப்பையில் நூலகம் ஒன்றே ஏற்படுத்தி அரசிற்கு வழங்கியுள்ளார்கள்.
நெற்குப்பை பேரூராட்சி பகுதியை சுற்றியுள்ள 15 கிராமங்களில் சார்ந்த மாணவர்களுக்கும் பயனுள்ள வகையிலும் இந்நூலகம் திகழ்ந்து வருகிறது. இது மட்டுமின்றி, இவ்வளாகத்தில் கலை மற்றும் பயிற்சி அரங்கத்தினை மொத்தம் ரூபாய் 12லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கான திட்டமிடப்பட்டு, நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அதில் ரூபாய் 6லட்சம் நன்கொடையாகவும் வழங்கியுள்ள முனைவர் சோம.லெ.சோமசுந்தரம் அவர்களுக்கு இந்நிகழ்ச்சியின் வாயிலாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் இப்பணிகள் தொடங்கப்படவும் உள்ளன.
மாணாக்கர்கள் தங்களின் அறிவை கூர்மையை மேம்படுத்துவதற்கு நூலகங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் நூலகங்கள் உள்ளன. மேலும், சிவகங்கையில் மாவட்ட நூலகமும் உள்ளது. இந்நூலகத்தில் தினந்தோறும் 100 மாணவ மாணவியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வாயிலாக அழைத்துச் செல்லப்பட்டு வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தங்களின் எதிர்கால திட்டத்திற்கு உறுதுணையாக இருந்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்,நான் முதல்வன் என்ற திட்டத்தினை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார்கள். இத்திட்டத்தின் பயன்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு, தங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, அதனை நோக்கி தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். அவை இன்னும் உங்கள் அறிவு கூர்மையை மேம்படுத்தவும், தெளிவான சிந்தனைக்கு அடிப்படையாகவும் அமையும்.
அரசு பள்ளியில் பயின்று, தங்களது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் பலர் உள்ளனர், உதாரணமாக ஏபிஜே அப்துல்கலாம் அவர்களைப் பற்றி நீங்கள் அறிந்தவையை, அவரை போன்றோரை நாம் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்று, உங்களது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் , அறிஞர் சோம.லெ அவர்களின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, உங்கள் மாவட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நெற்குப்பை பேரூராட்சித்தலைவர் அ.புசலான், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், முனைவர். சோம.லெ.சோமசுந்தரம், மதுரை ஹலோ எப்எம். ஆத்திச்சூடிஜெயராம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu