மானாமதுரை தாலுகாவில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம்

மானாமதுரை தாலுகாவில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம்
X

மானாமதுரை தாலுகாவில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஒரு அணைக்கட்டை பார்வையிட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத்.

மானாமதுரை தாலுகாவில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம்

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், மானாமதுரை வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று தகுதியுடைய பயனாளிகளுக்கு ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், மானாமதுரை வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் , மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்டஆட்சியர் ஆஷா அஜீத்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணுகின்ற அரசு இயந்திரம் களத்திற்கு வரும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வுகளில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடை இன்றி மக்களை சென்றடைவது உறுதி செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், இன்றைய தினம் காலை 9 மணியளவில் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உரிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தங்களது துணை ரீதியாக வட்டளவில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடன், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு பகுதியிலுள்ள நியாய விலை கடையின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிமை பொருட்களின் தரம், இருப்பு நிலை உள்ளிட்டவைகள் தொடர்பாகவும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தின் வாயிலாக பெறப்பட்டு வரும் மனுக்கள் தொடர்பாகவும், குலையனூர் ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள்இ அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் கற்பித்தல் முறை ஆகியன குறித்தும், சூரக்குளம் பில்லுறுத்தான் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், துறையங்குளம் துணை சுகாதார மையம் அதேபோன்று, அன்னவாசல் ஊராட்சி மன்ற அலுவலகம் அப்பகுதியில் உள்ள கிராம சேவை மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் ஆகியவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதியில் நெல் அறுவடை செய்யும் விவசாயிகளிடம் உற்பத்தி மற்றும் விலை, தேவையான கூடுதல் வசதிகள் ஆகியன குறித்தும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மிளகனுர் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு மற்றும் மாணாக்கர்களின் கற்றல் முறை தொடர்பாகவும், இப்பகுதியில் உள்ள நலவாழ்வு மையத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து தேவையான மருத்துவ உபகரணங்கள் குறித்தும் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், மிளகு நூல் பெரிய கண்மாய் கலங்கு மடை பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முத்துனேந்தல் அருகில் உள்ள கட்டிக்குளம் மலைப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள் தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மானாமதுரை நகர் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பதியப்பட்டுள்ள வழக்குகளின் நிலைகள், காவலர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, மானாமதுரை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் மானா மதுரை வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த பொது மக்களை ஒருங்கிணைத்து, கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கு ஏதுவாக திட்டமிடப்பட்டு அதன்படி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, அரசின் ஒவ்வொரு துறைகளின் சார்பில், சம்பந்தப்பட்ட முதல் நிலை அலுவலர்கள் தங்களது துறை அலுவலர்களுடன், இன்றைய தினம் காலை 9:30 மணி முதல் மானாமதுரை வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தங்களது துறை ரீதியான பணிகளை நேரடியாக கள ஆய்வில் உட்படுத்திக் கொண்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு மனுக்களையும் பெற்றுள்ளனர்.

மேலும், இப்புதிய திட்டத்தினை முன்னிட்டு,நேற்றைய தினம் 255 மனுக்களும், இன்றைய தினம் 176 மனுக்களும் என மொத்தம் 431 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில், தகுதியுடைய 31 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு உரிய பயன்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாலை, மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பல்வேறு பணிகள் தொடர்பான கள ஆய்வுகளும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவைகளின் கீழ் இயங்கி வரும் மாணவ மாணவியர் விடுதிகளின் செயல்பாடுகள் தொடர்பான கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாளைய தினமும் (01.02.2024) காலை வேலையில் மானாமதுரை வட்டளவிற்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகள் தொடர்பாகவும், முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னதாக,அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிக்கப்பட்டு, இன்றைய தினம் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு பெறப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக, தகுதியுடைய பயனாளிகளுக்கு உரிய பயன்கள் உடனடியாக வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தவிர பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாகவும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதுபோன்று, பிரதி மாதம்தோறும் மாவட்டத்தில் ஒரு வட்ட அளவில் நடைபெறவிருக்கும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, மானாமதுரை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக மகளிர் திட்டத்தின் சார்பில் 7 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.72 லட்சம் மதிப்பீட்டிலான மகளிர் சுய உதவி குழுக் கடன் உதவிகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 6 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.71 லட்சம் மதிப்பீட்டிலான மகளிர் சுய உதவி குழு கடனுதவிகளையும், வருவாய்த் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் மூன்று பயனாளிகளுக்கு ரூ.01.20 லட்சம் மதிப்பீட்டிலான பயிர் கடன் உதவிகளையும் என மொத்தம் ரூ.144.20 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.க.அர்விந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, மானாமதுரை நகர மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் லதா அண்ணாதுரை, மானாமதுரை வட்டாட்சியர் ராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அரசு துறை முதல் நிலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!