ஒரே நபரும் உயிரிழந்தார் : ஆளில்லா கிராமமானது மீனாட்சிபுரம்..!
மீனாட்சிபுரத்தில் தன்னந்தனியாக வாழ்ந்த கந்தசாமி நாயக்கர் (கோப்பு படம்)
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வசித்து வந்த ஒரே நபரான முதியவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதனால், ஆளில்லா கிராமமானது மீனாட்சிபுரம்.
இந்தக் கிராமத்தில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி 1,269 போ் வசித்து வந்தனா். பின்னா், அவா்கள் பிழைப்புக்காக ஊரை காலி செய்துவிட்டு வெளியூா்களுக்குச் சென்று விட்டனா். எனினும், கந்தசாமி (75) என்பவா் மட்டும் தொடா்ந்து அங்கேயே, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வசித்து வந்தார்.
தண்ணீா்த் தட்டுப்பாடு, பிள்ளைகள் வெளியூா்களுக்கு வேலைக்குச் சென்றது போன்ற காரணங்களால் மக்கள் ஊரைவிட்டுச் சென்றதாக, பக்கத்து ஊா் மக்கள் தெரிவித்தனா். ஆனால், கந்தசாமி மட்டும், கடைசி வரை இங்கேயே தான் இருப்பேன் என பிடிவாதமாக வாழ்ந்துள்ளார்.. மேலும், மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும், ஊா் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தாராம்.
இந்நிலையில், ஆசை நிறைவேறாமலேயே அவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.. அதையடுத்து, அவரது உறவினா்கள் மட்டுமன்றி, அந்த ஊரில் வாழ்ந்த பெரும்பாலானோரும் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினா். அவரது இறுதிச் சடங்கு அருகேயுள்ள சிங்கத்தாகுறிச்சியில் நடத்தப்பட்டு, மீனாட்சிபுரத்தில் உடல் அடக்கம் நடைபெற்றது.
இவரது இறப்பு, மீனாட்சிபுரத்தைப் பூா்வீகமாகக் கொண்ட இளைஞா்களுக்கு அவா்களது அப்பா, தாத்தா வாழ்ந்த கிராமத்தைப் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கந்தசாமி ஆசைப்படி, மீனாட்சிபுரத்தில் மக்கள் மீண்டும் குடியேறி, ஊா் செழிப்பாக வேண்டும் என, சிங்கத்தாகுறிச்சி மக்கள் விருப்பம் தெரிவித்தனா்.
ஆனால், இன்றைய நிலவரப்படி அந்த ஊர் ஆளில்லா கிராமம் ஆனது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu