தமிழகத்திற்கு மேலும் 7 வந்தே பாரத் ரயில் சேவை
வந்தேபாரத் ரயில் (பைல் படம்)
இந்தியாவில் ரயில்வே துறையை மேம்படுத்தும் விதமாக வந்தே பாரத் ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு, இயங்கி வருகிறது. தானியங்கி கதவுகள், முற்றிலும் ஏசி, பயோ கழிப்பறைகள் என்று வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.
இந்த வந்தே பாரத் ரயில்களில் முதலில் டெல்லி- கான்பூர்- அலகாபாத்- வாரணாசி வழித்தடத்தில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல வழித்தடங்களில் இவை விரிவுபடுத்தப்பட்டது. நாடு முழுக்க 15 வழித்தடங்களில் இப்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை மேலும் வேகமாக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுக்க விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பது ரயில்வே துரையின் இலக்காக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே சென்னை- பெங்களூர்- மைசூரு இடையே வந்தே பாரத் சேவை உள்ளது. அதேபோல கடந்த மாதம் சென்னை- கோவை வந்தே பாரத் ரயிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி நேரில் வந்து இதைத் தொடங்கி வைத்தார். இதற்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை நாடு முழுக்க இயக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டமாக உள்ளது. இந்த 75 ரயில்களில் 31 ரயில்கள் மிக விரைவில் தொடங்கப்படும். மேலும், இந்த ரயில்களின் வழித்தடங்கள் குறித்தும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பை - மட்கான், ஜபல்பூரில்- இந்தூர், ஹவுரா - பூரி, செகந்திராபாத் - புனே ஆகிய வழித்தடங்களில் விரைவில் வந்தே பாரத் வர உள்ளது.
இது தவிர மங்களூர்- மைசூர் மற்றும் இந்தூரில் இருந்து ஜெய்ப்பூர் ரூட்களும் பரிசீலனையில் உள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ரா, டெல்லியில் இருந்து கோட்டா மற்றும் டெல்லியிலிருந்து பிகானேர் வரையும் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது. மும்பையிலிருந்து உதய்பூர், ஹவுரா சந்திப்பு முதல் பொகாரோ எஃகு நகரம் மற்றும் ஹவுரா சந்திப்பிலிருந்து ஜாம்ஷெட்பூர் உள்ளிட்ட வழித்தடங்களிலும் மிக விரைவில் வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, சென்னையைக் கன்னியாகுமரியுடன் இணைக்கும் வகையில் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் இயக்கவும் முடிவு செய்துள்ளனர்.
விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல், பெங்களூரு முதல் கோவை, எர்ணாகுளம் சந்திப்பு முதல் சென்னை சென்ட்ரல் வரையிலும் வந்தே பாரத் ரயில்சேவை வர உள்ளது.
அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் செகந்திராபாத், பெங்களூரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான ரூட்களிலும் வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மொத்தம் தமிழகத்தில் ஏழு வழித்தடங்களில் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu