ஜி20 மாநாடு: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

ஜி20 மாநாடு: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
X
ஜி20 மாநாட்டை முன்னிட்டு மாமல்லபுரம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

ஜி 20 உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. ஜனவரி 31முதல் பிப்ரவரி 2வரை சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகில் உள்ள 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் பிப்ரவரி 1ம்தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ஜூனன்தபசு, ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை பகுதிகளை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.

இவர்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, புராதன சின்னம், சோதனை சாவடி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் காவல் பணியில் ஈடுபட உள்ளனர்.,

இன்று முதல் மாமல்லபுரம் வரும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் நுழைவு வாயிலில் பதிவு செய்யப்பட்ட பிறகே அனுப்பப்படுகிறது. ஹோட்டல், ரிசார்ட், விடுதி, ஹோம் ஸ்டேகளில் தங்கும் அனைவரின் விபரங்களும் உடனுக்குடன் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

புராதன சின்னங்கள் பகுதியில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிப்ரவரி 1ம் தேதி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதி இல்லை.

புராதன சின்னம் அருகே சாலையோர கடைகள் நடத்தவும் அனுமதி இல்லை. அன்று முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் மாமல்லபுரம் இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story