பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!

பள்ளி திறப்பு தள்ளி வைப்பு?  அமைச்சர் ஆலோசனை..!
X

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு எப்போது (கோப்பு படம்)

கோடை வெயிலின் உக்கிரத்தை பொறுத்து பள்ளி திறப்பை தள்ளி வைக்க அரசு ஆலோசித்து வருகிறது.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவது, அடுத்த கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறப்பது எப்போது என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன், அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா, மற்றும் இதர துறைகளை சேர்ந்த அதிகாரிகள், இணை இயக்குநர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்த தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்தும், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்தும் விவரங்கள் கேட்டார்.

மேலும், அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை எப்படி நடத்தி முடிப்பது, பள்ளிகளை கோடை விடுமுறைக்கு பிறகு எப்போது திறப்பது, பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்குவது குறித்தும் கேட்டறிந்தார். இது தவிர பள்ளிக்கல்வித்துறைக்காக அரசு ஒதுக்கீடு செய்த நிதியின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, காலை சிற்றுண்டி திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தாண்டுக்கான பள்ளிகளின் பணி நாட்கள் முடிவடைந்ததை அடுத்து, அடுத்த கல்வி ஆண்டில் எப்போது பள்ளிகளை திறப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறக்கப்படும் போது, வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் என்ன நடவடிக்கை எடுப்பது, அல்லது ஒரு வாரம் கடந்து பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தேர்வு முடிவுகள் வெளியிடுவது, பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்து சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடந்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகள், பள்ளிகள் திறப்பது குறித்து மே இறுதி வாரத்தில் அறிக்கை வெளியாகும் என்று பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா