ரூ.6 லட்சம் கொடுக்கல் வாங்கல்: கடத்திவந்த வாலிபர் கிணற்றில் விழுந்து சாவு
கதறி அழும் உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை தாலுகா, எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜா. ராஜா தனது மனைவி பிரியாவுடன் நேற்று, சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருணா பகுதியிலுள்ள வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.
அப்போது எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்த கணேசன், சீனிவாசன் ஆகியோர் ராஜாவை பைக்கில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், செம்மரக்கடத்தல் ஏஜென்டாக உள்ள, ஆத்தூர் அடுத்த கும்பபாடி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் செல்வம், ஆகியோர் ராஜாவை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ராஜாவின் மைத்துனர் சத்யராஜிடம் போனில் தொடர்பு கொண்ட தர்மராஜ், தனக்கு சொந்தமான 4.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ செம்மரக்கட்டைகளை மூன்று லட்ச ரூபாய்க்கு திருடிச் சென்று விற்பனை செய்துள்ளனர். அதற்குரிய தொகையாக, ஆறு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் ராஜாவை கொன்று விடுவோம் எனக் கூறியுள்ளனர்.
பணம் கொடுப்பதற்கு நேரம் கேட்ட சத்யராஜிடம், குறிப்பிட்ட நேரத்தில் பணம் வரவில்லை எனில் 8 பேர் சேர்ந்து ராஜாவை கொலை செய்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
சில மணி நேரத்துக்குப் பின் ராஜா தங்களிடம் இருந்து தப்பிச் சென்றபோது, சேலம், வாழப்பாடி, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பின் கடத்திச் சென்ற கும்பல் தப்பியுள்ளனர்.
தகவலறிந்த வாழப்பாடி போலீசார் கிணற்றிலிருந்து ராஜாவின் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று, ராஜாவின் மனைவி பிரியா கருமந்துறை போலீசில், தனது கணவர் ராஜாவை கடத்திச் சென்ற கும்பல் பணம் கேட்டு மிரட்டி கொலை செய்துவிட்டதாக வாழப்பாடி காவல் நிலையம் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவிடம், புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணுப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய வாழப்பாடி பகுதியை சேர்ந்த ஜீவா, திலீப் மற்றும் கார்த்தி ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செம்மரக்கடத்தல் ஏஜென்ட் உட்பட 5 பேர் கொண்ட பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu