உரிமம் இல்லாத துப்பாக்கி: மலைகிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரித்த போலீசார்

உரிமம் இல்லாத துப்பாக்கி: மலைகிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரித்த போலீசார்
X

உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என,  மலைகிராமங்களில் தண்டோரா போட்டு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் மலைகிராமங்களில் தண்டோரா போட்டு போலீஸார் எச்சரித்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெரியக்குட்டிமடுவு கிராமத்தில், கடந்த இரு ஆண்டுக்கு முன் வனப்பகுதியையொட்டி இயங்கிய கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலையை வனத்துறையினர் உதவியோடு போலீஸார் கண்டுபிடித்தனர். வனப்பகுதியில் அரிதாக இருக்கும் தோதகத்தி ஈட்டி மரத்தை வெட்டும் மர்ம கும்பல், கள்ளத்தனமாக நாட்டுரகத் துப்பாக்கிக்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனால், அருநூற்றுமலை மற்றும் கல்வராயன் மலை கிராமங்களில் உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கிகள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கலாமென தெரியவந்ததால், அப்போதைய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார், வனத்துறையினருடன் இணைந்து, 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சின்னகல்வராயன், பெரியகல்வராயன், அருநூற்றுமலை, பெலாப்பாடி மலை, பெரியகுட்டிமடுவு, சந்துமலை, மண்ணுர்மலை உள்ளிட்ட மலை கிராமங்களில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக, உளவுத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின், பேரில் தற்போதைய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், அனைத்து மலை கிராமங்களிலும் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க, அந்தந்த பகுதி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, வாழப்பாடி காவல் உட்கோட்டத்திலுள்ள கல்வராயன்மலை கருமந்துறை, கரியகோவில், காரிப்பட்டி, ஏத்தாப்பூர் மற்றும் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து மலை கிராமங்களிலும், உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள், துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டுமென தண்டோரா போட்டும், துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கியும் பொதுமக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரிரு தினங்களுக்குள் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை தானாக முன்வந்து ஒப்படைக்கலாம்; தவறினால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், அனைத்து கிராமங்களிலும் அதிரடி சோதனை நடத்தி துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் திட்டமிடப்பட்டுள்ளன. போலீஸார் சோதனை நடத்தி உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!