கடனை கேட்டு கொலைவெறி தாக்குதல்: பாதிக்கப்பட்டோர் ஆட்சியரிடம் மனு

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்டோர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுக்கா வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் இலக்கியா. கூலித் தொழில் செய்து வரும் இலக்கியா வாழப்பாடி பகுதியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் 30,000 ரூபாய் கடன் பெற்று, மாதத் தவணையாக 1500 ரூபாய் திருப்பி செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதால் போதிய கூலி வேலை கிடைக்காமல் வருமானமின்றி இலக்கியா பொருளாதார சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக மாதத் தவணை கட்ட இயலாமல் இலக்கியாவும் அவரின் கணவரும் தவித்து வருகின்றனர்.
இதனை பொருட்படுத்தாமல் நிதி நிறுவன மேலாளர் சந்தானம், ரமேஷ் உள்ளிட்டோர் தலைமையில் 30 பேர் கொண்ட கும்பல், இலக்கியாவின் வீட்டிற்குச் சென்று அவரை தரக்குறைவாக பேசி அவரது கணவர் மற்றும் உறவினர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி , உருட்டுக் கட்டைகளால் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் பெற்ற கடனுக்கு ஈடாக இலக்கியாவை படுக்கைக்கு அனுப்பி கடனைத் தீர்த்து கொள்ளுங்கள் என்று மனிதாபிமானமற்ற முறையில் சந்தானம் தலைமையிலான பைனான்ஸ் ஊழியர்கள் அராஜகமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்த இலக்கியாவின் கணவர் அருண் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த நிலையில் தாக்குதல் நடத்திய வயா பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து தாக்குதலின்போது தங்களிடம் இருந்து பறித்துக் கொண்ட 5 பவுன் தங்கச் சங்கிலியையும் மீட்டுத்தருமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலக்கியா மற்றும் அவரின் சகோதரி ராஜேஸ் ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து இலக்கியா கூறுகையில், சம்பவம் தொடர்பாக வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் நேற்று அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் எங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வாங்கிய கடனுக்கு தரக்குறைவாக பேசி பெண்களை படுக்கைக்கு அழைத்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நிதி நிறுவன ஊழியர்களின் கொடூர செயல் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu