சேலத்தில் பள்ளி சென்ற மாணவிக்கு கொரோனா
சேலத்தில் பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தும்பல் ஊராட்சியை சேர்ந்த மாணவி வாழப்பாடி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி திறந்ததையொட்டி பள்ளி திறப்பிற்கு முந்தைய நாள் விடுதிக்கு வந்த மாணவி அங்கு தங்கியிருந்து மறுநாள் பள்ளி திறந்தவுடன் பள்ளிக்கும் சென்று உள்ளார்.
பள்ளிக்கு வருவதற்கு முன்பாக அவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை கொடுத்து விட்டு பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையினர் அவரது இல்லத்திற்கு சென்ற போது மாணவி பள்ளிக்கு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை விடுதியில் இருந்து அழைத்து சென்று ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் மாணவியுடன் விடுதியில் இருந்த 36 மாணவிகள் மற்றும் வகுப்பறையில் அவருடன் இருந்த 25 மாணவிகள் மற்றும் விடுதி வார்டன், பள்ளி ஊழியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 72 பேருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் அனைவரையும் தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu