சேலம் அருகே கட்டணம் செலுத்தாததால் மாணவி வெளியேற்றம்: ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

சேலம் அருகே கட்டணம் செலுத்தாததால் மாணவி வெளியேற்றம்: ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த மாணவி.

சேலம் அருகே கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் வெளியே அனுப்பியதாகக் கூறி பாதிக்கப்பட்ட மாணவி ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகள் அதே பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில் இன்று பள்ளிக்கு சென்ற மாணவியை பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெளியே அனுப்பி விட்டதாக கூறி, பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோருடன் வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இது குறித்து பள்ளி மாணவி கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி, அடித்து அவமானப்படுத்தி வெளியே நிறுத்தியதால் நேரில் பெற்றோர் வந்து கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே காக்காபாளையம் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியதால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் வார வேலை நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை வகுப்புகள் நடத்துவதாகவும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூடுதல் நேரத்தில் வகுப்புகளை நடத்துவதாகவும், இதற்காக பள்ளியிலிருந்து வழங்கப்பட்ட ஒப்புதல் கடிதத்தில் பெற்றோர் கையெழுத்திட வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதாகவும், இதனால் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி கையெழுத்திட மறுத்ததாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மகளை பள்ளியில் இருந்து வெளியேறியதாகவும் மாணவியின் தந்தை மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்கள் பள்ளியில் சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் அவரது சகோதரர் என இரண்டு பேர் படிப்பதாகவும், இதுவரை அவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தச் சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் தகராறில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பாக புகார் அளிக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தைக்கும் மாணவியின் பெற்றோர் வந்த்தாகவும், ஆனால் அதன்பின் பெற்றோர் தரப்பிலிருந்து எந்தவித தகவலும் இல்லை என்று கூறினர். மேலும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று வந்த மாணவி உறவினர் ஒருவரோடு வந்ததாகவும், பெற்றோரை அழைத்து வரும்படி கூறி அனுப்பி விட்டோம். ஆனால் அவர் மீண்டும் பள்ளிக்கு வராமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார் என்றும் விளக்கமளித்தனர். இதுதவிர பெற்றோர் தரப்பில் கூறும் மற்ற எந்த குற்றச்சாட்டுகளும் உண்மை இல்லை என்றும் அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது