திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால், அதிமுகவின் தேர்தல் அறிக்கை காமெடி வில்லன்: ஸ்டாலின் பேச்சு
சேலத்தில் ஏற்காடு மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசும் போது:
தமிழகத்தில் நடைபெற்று வரும் அராஜக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமிக்கு இது கடைசி தேர்தல்,முதல்வர் மட்டுமல்ல அரசியலை விட்டே ஓடி போக போகிறார். இதனால் தான் தன்னை மறந்து ஆத்திரத்தில் பேசுகிறார். அவர் படிப்படியாக எப்படி பொறுப்புக்கு வந்தார் என்பது மக்களுக்கு தெரியும்.
ஜெயலலிதாவால் தான் அதிமுகவில் பல்வேறு பொறுப்புக்கு வந்தார். எம்எல்ஏ, அமைச்சர் ஆனார். இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவரால்தான் முதல்வர் ஆனார் என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து போனதே அவர் முதலமைச்சர் ஆனதுக்கு காரணம். அவர் ஊர்ந்து போனதை நிருபிக்க நான் தயார். விவாதத்திற்கு எடப்பாடி தயாரா ?.
மேலும் ஜெயலலிதாவால் தான் முதல்வரனேன் என்று எடப்பாடி பழனிச்சாமி அப்பட்டமான பொய் பேசி வருகிறார்.ஜெயலலிதா மீது விசுவாசம் இருந்தால் அவரின் மரணத்திற்கு உண்மை காரணம் கண்டுபிடித்து சொல்லி இருக்க வேண்டும். ஆனால் சசிகலாவால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, அவருக்கே உண்மையாக இல்லை என்றார்.
ஜெயலலிதா மரணம் குறித்து எந்த அமைச்சர்களும் முறையான விளக்கம் கொடுக்கவில்லை, ஜெயலலிதா மர்ம மரணத்திற்கான முறையான காரணம் கேட்டு வேதனையோடு பேசுகிறேன். கேலி செய்யவில்லை.ஜெ மரணத்தை மூடி மறைக்க, எங்கள் மீது குற்றம் கூறி,புதிய கதை சொல்ல எடப்பாடி துவக்கியுள்ளார் என கோரினார்.
மேலும் அவர் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை காமெடி வில்லன் போல் அமைந்துள்ளது.திமுக தேர்தல் அறிக்கையை நகல்எடுத்து அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் ஹெலிகாப்டர் கொடுப்போம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறினார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். எதிர்கட்சியே இல்லாத ஆட்சி அமைய போகிறது.மக்கள் அனைவரும் பொறுத்திருந்து பாருங்கள். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் எனவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu