நிழல் மறைந்த அதிசயம்: அறிவியல் இயக்க நிகழ்ச்சியை பார்வையிட்ட மாணவர்கள்!
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடுவானத்திற்கு நேர் செங்குத்தான உச்சியில் சூரியன் வரும் போது, நிழல் முழுவதுமாக மறைகிறது. வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும் இந்த அரிய நிகழ்வு, அனைத்து இடங்களிலும் நிகழ்வதில்லை. 23.5 மற்றும் மைனஸ் 23.5 அட்சரேகை கொண்ட பகுதியில் மட்டுமே ஏற்படுகிறது. ஒரு இடத்தில் அட்சரேகையும், சூரியனின் சாய்வுக்கோணமும் சமமாக இருக்கும் போது, நிழல் பூஜ்ஜியமாகிறது.
அதன்படி, சேலத்தில் பூஜ்ய நிழல் நிகழ்வு, இன்று ஏற்பட்டது. சரியாக 12.16 மணிக்கு நிழல் முற்றிலும் மறைந்தது. வானவியலில் ஏற்படும் இந்த அரிய நிகழ்வை மாணவர்களும் பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் மஜ்ராகொல்லப்பட்டி பகுதியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில வானவியற் கருத்தாளர் ஜெயமுருகன் சில பொருட்களை வைத்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
நிழல் ஏன் மறைகிறது? இந்த நிகழ்வால் வானவியலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு , அவர் எடுத்துரைத்தார். இதனை மாணவர்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டனர். நிழல் மறையும் நாள் குறித்து அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு பாட புத்தகத்தில், இந்த அறிவியல் நிகழ்வை இடம்பெற செய்ய வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வு அடுத்து, வரும் ஆகஸ்ட் 22 ம் தேதி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu