கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் உருக்காலை முன்பு ஊழியர்கள் போராட்டம்
இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான SAIL மற்றும் RNIL நிர்வாகத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், சேலம் இரும்பாலையில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு சேலம் இரும்பாலை நிர்வாகம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருவது வழக்கம். கடந்த 2016ம் ஆண்டுடன் பழைய ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை, சேலம் இரும்பாலை நிர்வாகம் நடத்தாமல் புதிய ஊதியத்தை வழங்காமல், 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்வதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் இரும்பாலை நுழைவாயிலில் முன்பு தொமுச, சிஐடியு, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமாள் கூறும்போது, 2016 ஆண்டு பழைய ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், 2017ஆம் ஆண்டு புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்க, பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு சேலம் இரும்பாலை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டோம்.
ஆனால், செவிசாய்க்காமல் தொழிலாளர் விரோதப் போக்கைக் கையாண்டு வருகிறது. எங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய 15 சதவீத ஊதியம், 35 சதவீத அலவன்ஸ், புதிய ஊதிய ஒப்பந்தப்படி வழங்க வேண்டுமெனவும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த பலமுறை கேட்டும் இரும்பாலை நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறினார்.
மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிர்வாகமான SAIL நிர்வாகம் உடனடியாக எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், மே 6ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த 65 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்கள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், இதில் சேலம் இரும்பாலை நிர்வாகத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu