சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை
சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க, சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து வரிசையில் நிற்கும் மக்கள்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்ததன் படி ரெம்டெசிவிர் மருந்துகள், சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் விற்பனை துவக்கம்..
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து மிகவும் தட்டுப்பாடாக இருந்து வந்தது. மேலும் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளரிடம் இன்று காலை கூறும் போது, இந்த மருந்து தமிழகத்தில் உள்ள 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள மக்கள் மட்டுமல்லாமல் நாமக்கல், ஈரோடு போன்ற அண்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் இங்கு வந்து மருந்துகளைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மருந்து வேண்டுவோர், நோயாளி அனுமதிக்கப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனை பரிந்துரைக் கடிதம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்பதற்கான RTPCR பரிசோதனை சான்றிதழ், சிடி ஸ்கேன் சான்றிதழ், நோயாளியின் ஆதார் அட்டை நகல், மருந்து வாங்க வருபவரின் ஆதார் அட்டை நகல் என ஐந்து ஆவணங்கள் கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் தெரிவித்ததோடு, இன்று முதல் கட்டமாக 80 மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் நாளை முதல் டோக்கன் முறையில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோருக்கு மருந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மருந்து இருப்பைக் கொண்டு மருந்து விற்பனையை அதிகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு தேவையான ஆறு டோஸ் யின் விலை 9408 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை முதல்வர் முருகேசன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu