15ம் தேதி முதல் கூலியை சரக்கு உரிமையாளரே ஏற்பு: லாரி உரிமையாளர்கள் சங்கம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி.
கொரோனா பரவல் காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக லாரி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படிப்படியாக இயல்பு நிலை தற்போது திரும்பிய போதிலும் பெரும்பாலான ஆலைகள் இயங்காத காரணத்தால் லாரிகள் அதிகம் இருந்தும் போதிய அளவில் சரக்கு போக்குவரத்து இல்லை என்கின்றனர் லாரி உரிமையாளர்கள்.
இந்தநிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி, லாரி உரிமையாளர்களின் வருவாய இழப்பை சமாளிக்கும் நோக்கில் செலவினங்களை குறைக்க ஆலோசிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் ஏற்று கூலி, இறக்கு கூலி உள்ளிட்ட அனைத்து விதமான படிகளையும், சரக்கு உரிமையாளர்களே ஏற்க வேண்டும் என்ற கூலிமாற்ற முறை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் லாரிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சரக்கு போக்குவரத்து இல்லாத காரணத்தால் வாடகை உயர்த்த முடியாத நிலையில் இந்த கூலி மாற்ற முறை வரும் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும், இந்த முறையில் இனி எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் டீசல் விலையை குறைக்க முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும், இந்த விலை குறைப்பு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் பகுதியில் கலப்பட டீசல் பழக்கம் இருந்தால் அதை தடுக்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu