மூன்றாம் அலையை எதிர்கொள்ள மருத்துவ உள்கட்டமைப்புகள் தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி
சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை கொண்ட 2-வது கொரோனா சிகிச்சை மையத்தைஅமைச்சர் செந்தில் பாலாஜி இன்று திறந்து வைத்தார்.
சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில், மேலும் 500 படுக்கைகள் கொண்ட, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய, 2வது கொரோனா சிகிச்சை மையத்தை, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று திறந்து, வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: உருக்காலை வளாகத்தில் இன்று திறக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தினையும் சேர்த்து சேலம் மாவட்டத்தில் 12,658 படுக்கை வசதிகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் இருக்கின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரடியாக உருக்காலை வளாகத்திற்கு அனுப்பலாம். சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து வரத் தேவையில்லை.
சேலம் மாவட்டத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள், நாளொன்றுக்கு 5 ஆயிரம் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 9,404 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 957 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் விகிதம் 10 சதவீதமாக குறைந்துள்ளது. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 தினங்களுக்குள் கொரோனா தொற்று பரவல் பூஜ்ஜியம் என்ற நிலையை எட்ட, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் உருக்காலை வளாகத்தில், 310 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நல்ல தரமான சிகிச்சை வழங்கப்படுவதால் நிறைய பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது 1000 படுக்கைகள் உருக்காலை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே தற்காலிக ஏற்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இடங்களில் இருக்கும் நோயாளிகளை இங்கும், சேலம் அரசு மருத்துவமனை வளாகத்திற்கும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசைப் பொருத்தவரை ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் 2-வது அலையை எதிர்கொள்கிற அளவிற்கு மருத்துவ கட்டமைப்பை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். அனைத்து விதமான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு இந்நோய்த் தொற்றில் இருந்து தமிழக மக்களை முதலமைச்சர் காப்பாற்றியுள்ளார். மூன்றாவது அலை வரக்கூடாது. ஒருக்கால் அப்படி வந்தால், அதை எதிர்கொள்வதற்கு தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை முதலமைச்சர் வலுவாக்கியுள்ளார்.மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
தடுப்பூசியைப் பொருத்தவரை கையிருப்பில் இருக்கும் அளவு அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். தமிழகத்தில் 100 சதவீதம் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதே அரசின் இலக்கு. அதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகிறார்; நாளை மறுதினம் ஜூன் 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu