கம்யூனிசம், லெனினிசம் புடைசூழ மம்தாவை மணந்த சோஷலிசம்: சேலத்தில் ஒரு புதுமை திருமணம்!
சேலம் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகனின் மகன் சோசலிசம் - மம்தாபானர்ஜி.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால், நடப்பது என்னவோ, நம்மூரில் தான். திருமணங்களில் பல புதுமைகளை கண்டிருக்கிறோம். விண்ணில் பறந்தபடி திருமணம், தண்ணீருக்குள் திருமணம் என்று பல தினுசுகளை பார்த்திருக்கிறோம்.
ஆனால், மணப்பெண் தொடங்கி, மணமகன், அவரது சகோதரர்கள் என குடும்பத்தினரின் பெயரில், கட்சி சிந்தாத்தங்களை கொண்ட நூதன பெயர்களை கொண்ட குடும்பத்தின் திருமணத்தை கேள்விப்பட்டிருகிறோமா? சேலத்தில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தீவிர பிரமுகரின் இல்லத்திருமணம் தான், தற்போது சோஷியல் மீடியாக்களில் ஹைலைட்டாக உள்ளது.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். கட்சி மீதும் கொள்கை மீதும் கொண்ட பற்றால், தனது மூன்று மகன்களுக்கும் கம்யூனிசம், லெனினிசம், சோசலிசம், தனது பேரனுக்கு மார்க்சிசம் என, கட்சி சித்தாந்த பெயர்களைச் சூட்டி உள்ளார் .
கம்யூனிசம் மற்றும் லெனினிசம் ஆகிய இரு மகன்களுக்கும் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், மூன்றாவது மகன் சோசலிசத்திற்கும், அவரது மாமன் பழனிச்சாமியின் மகளான மம்தாபானர்ஜிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த திருமணத்திற்காக அழைப்பிதழ் எதுவும் அச்சடிக்கப்படவில்லை. மாறாக, கட்சி நாளிதழான ஜனசக்தியில் விளம்பரம் மட்டும் கொடுத்தனர். இந்த விளம்பர அழைப்பிதழ்தான் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள், பிரபலங்கள், கம்யூனிச நாடுகளில் இருந்து தலைவர்கள் என ஏராளமானோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளதாக, மணமகனின் தந்தை மோகன், பெருமிதத்துடன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu