''உயிருக்கு ஆபத்து.. எம்எல்ஏ., மிரட்டல்'' பெண் கவுன்சிலரின் நள்ளிரவு வீடியோ பரபரப்பு

உயிருக்கு ஆபத்து.. எம்எல்ஏ., மிரட்டல் பெண் கவுன்சிலரின் நள்ளிரவு வீடியோ பரபரப்பு
X

அதிமுக பெண் கவுன்சிலர் பூங்கோடி.  

சேலத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அதிமுக ஒன்றிய பெண் கவுன்சிலர் நள்ளிரவில் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினரால் உயிருக்கு ஆபத்து. அதிமுக ஒன்றிய பெண் கவுன்சிலர் நள்ளிரவில் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.


சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவராக இருந்தவர் ஜெகநாதன். அதிமுகவை சேர்ந்த இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததை இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வைத்திட ஒன்றிய குழு கூட்டத்தை நடத்திட திமுகவினர் அனுமதி கோரினர். ஆனால் இதற்கு நீதிமன்றத்தின் மூலமாக தடை உத்தரவை பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்தது மட்டுமல்லாமல், அதிமுகவினர் அளித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கூட்டத்தை நடத்த அனுமதி அளித்திருந்தது.

இதனையடுத்து கடந்த 21 ஆம் தேதி பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாமல் அதிமுகவைச் சேர்ந்த பூங்கோடி மற்றும் சங்கீதா என்ற இரண்டு பெண் கவுன்சிலர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து அதிமுக தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அதிமுக பெண் கவுன்சிலர்கள் ஈரோடு செல்லும்போது, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நள்ளிரவில் 20 பேர் கொண்ட திமுக கும்பலால் கடத்தப்பட்டதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்டாயப்படுத்தி பயமுறுத்தி திமுகவுக்கு ஆதரவாக கையெழுத்து பெறப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பூங்கொடி என்ற பெண் கவுன்சிலர், தானும், சங்கீதாவும் கடத்தபட்டதாகவும், தங்களை மிரட்டி கட்டாயப்படுத்தி கையெழுத்து போடச் செய்ததாக பேசும் தொலைபேசி உரையாடல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ பதிவை அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் திமுகவினர் மீது குற்றச்சாட்டும் சுமத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பை அடுத்து, அதிமுக பெண் கவுன்சிலர் பூங்கோடி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் வீரபாண்டி தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான ராஜ முத்து மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் இருவரும் தங்களை மிரட்டி ஆடியோ பதிவு செய்ததாகவும், அதுமட்டுமல்லாமல் தங்களை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் மீது கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தாங்களாக விருப்பப்பட்டுதான் கையெழுத்துயிட்டோம் யாரும் தங்களை கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், எங்கள் வீட்டுக்கு வந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மிரட்டி எடுத்த வீடியோ வைத்துக்கொண்டு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டிய பெண் கவுன்சிலர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவினர் தங்களை கடத்தி மிரட்டி கட்டாயப்படுத்தி கையெழுத்து இட செய்ததாக வெளியான ஆடியோ பதிவும், அதிமுக சட்டமன்ற உறுப்பினரானால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளது பெரும் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி