சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் தகவல்
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்திபன், கௌதம்சிகாமணி, சின்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை குறைக்கவும், தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளித்து உயிரிழப்பை தடுப்பதற்காக ஏற்கனவே 177 மண்டலங்கள் பிரித்து கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டது போல் 20 ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனித்தனியே கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்கவும், மக்கள் தொகை அதிகமுள்ள நான்கு பேரூராட்சிகளுக்கு தனி கண்காணிப்பு அலுவலர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி சேலம் உருக்காலையில் அமைக்கப்பட்டு வரும் 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனைக்குப் பின்னர் ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து கட்டண விவரம் குறித்த பட்டியல் ஒவ்வொரு மருத்துவமனை முன்பாகவும் வைக்கப்பட உள்ளதாக கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக அந்த பட்டியலில் புகார் எண் இடம்பெறும் என்றும் கட்டணம் குறித்த புகார்களை பொதுக்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu