போதை ஊசி போடுவதாக மருத்துவர் மீது சேலம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

போதை ஊசி போடுவதாக மருத்துவர் மீது சேலம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
X

போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,  இடங்கணசாலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சேலம்  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

போதை ஊசி போட்டு இளைஞர்களை அடிமையாக்குவதாக, மருத்துவர் மீது புகார் கூறி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம் இடங்கணசாலை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், கடந்த 6 மாதத்துக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உள்ளூர் மருத்துவர் சிவக்குமாரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிவகுமாருக்கு, தினமும் மருத்துவர் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் ஊசிக்கு அடிமையான மணிகண்டன் தினந்தோறும் மருத்துவரை நாடிச்சென்று ஊசி போட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதனிடையே, கை கால்கள் செயலிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மணிகண்டனின் உறவினர்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். மனுவில், இடங்கணசாலை பகுதியில் உள்ள போலி மருத்துவர் சிவக்குமார், பொது மக்களுக்கு தினந்தோறும் மருத்துவம் பார்த்து வருவதாகவும், அவர் இல்லாத நேரத்தில் அவரது மகன்கள் ஊசி போட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மணிகண்டனுக்கு தொடர்ந்து ஆறு மாத காலமாக போதை ஊசி போட்டதால், அவர் போதைக்கு அடிமையாகி கை கால்கள் செயலிழந்து தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்து விட்டதாகவும் கூறி உள்ளனர்.

எனவே, போதை ஊசி போட்டு இளைஞர்களை சீரழிக்கும் போலி மருத்துவர் சிவக்குமார் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil