சேலம்: போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று உடல்நிலை மோசமானவர் உயிரிழப்பு
உயிரிழந்த மணிகண்டன்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கனசாலை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன். தறி தொழிலாளியான இவர், 6 மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதே பகுதியை சேர்ந்த மருத்துவர் சிவக்குமாரை அணுகியுள்ளார். அவர் அளித்த சிகிச்சையை பின்பற்றிய மணிகண்டனுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணிகண்டனுக்கு அளித்த சிகிச்சை முறை குறித்து தெரிந்து கொள்ள, மருத்துவர் சிவகுமாரின் சிகிச்சை மையத்திற்கு உறவினர்கள் சென்றனர். அப்போது, அவர் தலைமறைவானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மருத்துவர் சிவக்குமார் குறித்து விசாரித்ததில், மருத்துவ படிப்பு படிக்காமல் வைத்தியம் பார்த்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், நேற்று அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் நேற்று பரபரப்பு நிலவியது. இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, மகுடஞ்சாவடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் சிவகுமாரை கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu