நெல் பயிரில் இலை கருகல் நோய்: வேளாண்மை துறையினர் ஆய்வு

நெல் பயிரில் இலை கருகல் நோய்: வேளாண்மை துறையினர் ஆய்வு
X
தேவூர் பகுதியில், நெல் பயிரில் ஏற்பட்டுள்ள பாக்டீரியா இலை கருகல் நோய் குறித்து, வேளாண்மைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம், தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில், அதிக அளவில் பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்கம் காணப்படுகிறது. தேவூர் அருகே செங்கனூர், கரியானூர், தண்ணிதாசனூர், பூமணியூர், பொன்னம்பாளையம், கோனேரிபட்டி, குள்ளம்பட்டி, பழக்காரன்காடு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரில் கருகல் நோய் ஏற்பட்டு சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

இந்த வயல்களில், சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குனர் சுதா தலைமையில் வேளாண்மைத் துறையினர் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் நேரில் சென்று, பயிரினை ஆய்வு செய்து, சேலம் சந்தியூர் அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,

இது குறித்து சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குனர் சுதா கூறியதாவது: தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் பயிர்கள் வளர்ந்து வளர்ச்சி பருவத்தில் உள்ளது. ஆந்திரா பொன்னி நெல் ரகத்தில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது, தற்போது நெல் வயல்களில் ஆய்வு செய்த போது காவேரிபட்டி ஊராட்சி, கோனேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி, அரசிராமணி பிட் 1 கிராமத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் வயல்களில் பாக்டீரியா இலை கருகல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது

நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் நோய் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது 20 சதவீதம் தெளிந்த மாட்டு சாண கரைசலை, 15 நாட்கள் இடைவெளியில், 2 முறை தெளிக்க வேண்டும், அல்லது நெல் நடவு செய்த 30 மற்றும் 45நாட்களில், காப்பர் ஹைட்ராக்சைடு ஹெக்டேருக்கு 1.25 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும் அல்லது தேவையென்றால் ஸ்செப்டோமைசின் சல்பேட் உடன் டெட்ரோசைக்கிளின் கலந்த 300 கிராம் மருந்துடன் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1.25கிலோ மருந்துடன் 15 நாட்கள் இடைவெளியில் தேவைப்பட்டால் தெளிக்கலாம் என பல்வேறு பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!