சேலம் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர் வீடு.
சேலம் சூரமங்கலம் அருகே நெடுஞ்சாலை நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் ஆத்தூர் அருகே உள்ள தாழ்வெள்ளம் உண்டு உறைவிடப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
இதுமட்டுமன்றி தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாணவர் விடுதிகளில் சமையலர் பணிக்கு போலி பணி ஆணை வழங்கியதாக 56 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திலும் தலைமை ஆசிரியர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தொடர் புகார்களை அடுத்து அவரது வருவாய் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறை, கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான விசாரணையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் நெடுஞ்சாலை நகரில் வசிக்கும் வெங்கடேசனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையின் பிடியில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu