ஆஸ்பத்திரி செல்லும் பதற்றத்தில் விபத்து... இளைஞரிடம் சேலம் போலீசார் பெருந்தன்மை!

சேலத்தில், சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பதற்றத்தில் விபத்தை ஏற்படுத்திய இளைஞருக்கு உதவி, போலீசார் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

சேலம் ஐந்து ரோடு அடுத்துள்ள நரசோதிபட்டி பகுதியை சேர்ந்த அஜித் குமார். கட்டிடக்கலை நிபுணர். இவரது சகோதரிக்கு கொரோனாத் தொற்று பாதித்து, நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, தனது காரில் சகோதரியை அமர வைத்து கொண்டு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு, பதற்றத்துடன் விரைந்தார்.

சேலம், நான்கு ரோடு அருகே உள்ள மேம்பால சாலையில் விதிகளை பின்பற்றுவதற்காக, பிளாஸ்டிக் கூம்பு வடிவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது, அவரது கார் ஏறியது. அங்கு வைக்கப்பட்டிருந்த 50க்கு மேற்பட்ட தடுப்புகள் முழுவதும் இடித்து தள்ளப்பட்டு, கார் விபத்துக்குள்ளானது.

இதை பார்த்த போலீசார், காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, சகோதரியின் உடல் நிலையை விளக்கி, மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக, அஜித் குமார் கூறினார். இதையறித்த போலீசார், அவர் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல அனுமதித்து, உதவினர்.
மருத்துவமனையில் சகோதரியை சேர்த்த பிறகு, காவல்துறையிடம் வந்து, அஜித் குமார் உரிய விளக்கம் அளித்தார். அவரை விசாரணைக்காக சேலம் அஸ்தம்பட்டி காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சகோதரியில் உடல் நிலை சரியில்லாத பதற்றத்தில் நேரிட்ட தவறுக்காக, மனிதாபிமான அடிப்படையில் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர். போலீசாரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!