காப்பீட்டு திட்ட நோயாளிடம் கட்டணம் வசூலித்தால் திருப்பித்தரப்படும்: சுகாதாரத்துறை செயலாளர்
தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், சேலம் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் வந்த தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், இன்று காலை திடீரென சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வின் போது, சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, ஆக்சிசன் படுக்கை விவரம் உள்ளிட்டவை குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் நோய் கட்டுபாட்டு நடவடிக்கை, மற்றும் அடிப்படை கட்டமைப்பு என இரண்டு பிரிவாக நோய் தடுப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 17 மாவட்டங்களில் நோய் பரவல் குறைந்துள்ளது. 10 முதல் 15 மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று சற்று அதிகமாகா உள்ளது. அந்த மாவட்டங்களில் நோய் பரவலை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
நோய்த்தொற்று குறைவதால், மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. கொரோனா அறிக்குறி தென்பட்டால் உடனடியாக உரிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையை எதிர்கொள்ள 13 நபர்கள் கொண்ட தனிக்குழுவை, முதல்வர் அமைத்துள்ளார்.
மே முதல் 2 வாரங்களுக்கு பெரும் சவாலாக இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு, தற்போது போதுமான கையிருப்பில் உள்ளது. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால், கூடுதலாக வாங்கும் பணத்தை மருத்துவமனையிடம் இருந்து பொதுமக்களுக்கே திருப்பி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமின்றி, முதலமைச்சர் காப்பீடு திட்டம் இருந்தும் நோயாளிகளிடம் பணம் வசூலித்தால் அந்த மருத்துவமனைகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, 95.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 1.52 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளன. தமிழகத்தில், 843 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு, உரிய மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu