தமிழகத்தில் விரைவில் நகர்புற தேர்தல்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சேலத்தில் நகர்புற வளர்ச்சித்துறையின் கீழ் நகருக்குள் வனம் திட்டத்தின் கீழ் மரம் நடுதல் விழா, ஏரி வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வார்டுகளை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரே சீரான அளவு வாக்காளர்களை கொண்ட வார்டுகளை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளதாகவும், மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பாசனமற்ற ஏரிகளை தூர்வாரி பாசனபகுதிகளுக்கு மழை நீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.பாதாள சாக்கடை திட்ட பணியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவடையும். ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் கழிவு நீரை நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க கழிவு நீரை மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பணி துவங்கியுள்ளது. விரைவில் இத்திட்ட பணிகள் முழுமையாக விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu