தமிழகம் முழுவதும் உள்ளாட்சி கடைகளுக்கு சீரான வாடகை: விக்கிரமராஜா வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி கடைகளுக்கு  சீரான வாடகை: விக்கிரமராஜா வலியுறுத்தல்
X
மாநிலம் முழுவதும் கட்டணம் வசூலிக்கப்படும் காலாவதியான சுங்கச்சாவடிககளை நிரந்தரமாக மூட வேண்டும்

தமிழகம் முழுவதும் மறு ஆய்வு செய்து உள்ளாட்சி கடைகளுக்கு ஒரே சீரான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சேலம், வேலூர், கடலூர், கோவை ஆகிய மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று தனி வங்கி அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். சென்னையை சுற்றியுள்ள 4 சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதேபோல், மாநிலம் முழுவதும் காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதை நிரந்தரமாக மூட வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி கடைகளுக்கான வாடகை விகிதத்தை தமிழகம் முழுவதும் மறு ஆய்வு செய்து வாடகை சீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளாட்சி கடைகளுக்கு ஒரே சீரான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கும், இதர மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வேளாண் விளை பொருட்களுக்கும் செஸ் வரி வசூலிப்பதை தடை செய்ய வேண்டும். நீலகிரியில் வாடகை பிரச்னை காரணமாக 800 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளுக்கு வாடகை பலமடங்கு உயர்த்தியதால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, வாடகை உயர்வை திரும்ப பெற்று சீரான வாடகையை நிர்ணயம் செய்து கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வட மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் கண்டெய்னர் லாரிகள் மூலம் குட்கா பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இது போலீசாருக்கும் தெரியும். எனவே, அவர்களை கண்டுபிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் எடை சாதனங்களை ஆண்டுதோறும் உரிமம் புதுப்பிக்கும் நிலைமையை மாற்றி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமங்களை புதுப்பிக்கும் வகையில் நடைமுறைகளை மாற்றி அறிவிக்க வேண்டும் என விக்கிரமராஜா கூறினார். முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி, கடலூர் மண்டல தலைவர் சண்முகம், சேலம் மண்டல தலைவர் வைத்திலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!