மதவெறி சக்திகளை விரட்டியடிக்க தேசிய அளவில் வலிமையான கூட்டணி அமையுங்கள்: ஸ்டாலின்
சேலத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் முகஸ்டாலின் பேசியதாவது:
இந்திய நாட்டின் பாதுகாவலராக ராகுல் காந்தி திகழ்கிறார்.மிகப்பெரிய வெற்றியை தேடித் தர வேண்டும். தேர்தலுக்காக மட்டுமே சந்திப்பதில்லை. எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும், மக்களின் சுகதுக்கத்தில் பங்கேற்பவன் என்ற உரிமையோடு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.
கூட்டணி வேட்பாளர்களுக்காக மட்டுமல்ல. எனக்காகவும் ஓட்டு கேட்கிறேன். நானும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறேன் கூட்டணி வேட்பாளர்கள் வென்றால்தான் நான் முதலமைச்சராக முடியும்.
10 ஆண்டுகாலம் தமிழகம் பாதாளத்திற்கு போய்விட்டது. அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகாலம் பின்னோக்கி போய்விட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி ஆட்சி மோடி, அமித்ஷாவிற்கு அடிமையாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்பின் மூலம் மாநில உரிமைகளை பறித்து வருகிறார்கள். ஆகவே தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மாற்றத்திற்காக, நாங்கள் பதவி பெற வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த தமிழகத்தை காப்பாற்றுவதற்காக,சுயமரியாதை காப்பாற்றுவதற்காக, இழந்த உரிமைகளை நிலை நாட்டுவதற்காக, உரிமைகளை மீட்பதற்காக நடைபெறும் தேர்தல் இது என்றார்.
பழனிசாமியாக இருந்தாலும், பன்னீர்செல்வமாக இருந்தாலும் ஊழல்தான் பிரதானமாக உள்ளது. காவிரியில் உரிமை தர முடியாத மத்திய அரசு, அதை கேட்டு பெற முடியாத மாநில அரசு உள்ளது.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மூலம் தமிழகத்தின் மீது ரசாயன தாக்குதலை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பள்ளிகளில் தமிழை பயிற்றுவிப்பதில்லை. இதன் மூலம் கலாசார தாக்குதலை நடத்துகிறார்கள்.
அதிமுகவால் முடியாது என்பதை நாம் கடந்த 5 ஆண்டாக பார்க்கிறோம். பாஜகாவல் காலூன்று முடியாததால், அதிமுகவை மிரட்டி காலூன்ற பார்க்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு பிறகு பாஜகவின் சதிவேலை என்பதை பார்த்து வருகிறோம்.
மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதால், கூடுதல் நிதி கிடைத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி வருகிறார். வர்தா புயல் ஏற்பட்டபோது, தமிழக அரசு 22,573 கோடி ரூபாய் கேட்டு, 261 கோடி ரூபாய்தான் வந்தன. நிவர் புயல்காக 9 ஆயிரம் கோடி கேட்டு 131 கோடி வந்தது. புரவி புயலின் 17 ஆயிரம் கோடி கேட்டபோது, 1140 கோடி கிடைத்தது. ஜி.எஸ்.டி நிலுவை வரவில்லை. கரோனா கால நிதி வரவில்லை. அப்பறம் எதற்கு கூட்டணி என்றும் கேள்வி எழுப்பினார்.
ராகுல்காந்தியை சார் என்று கூப்பிட்டேன். இனிமேல் பிரதர் என அழைக்க வேண்டும் என்றார். எனவே, அவரிடம் உரிமை கலந்த அன்பான வேண்டுகோள். இந்தியா பாசிச மதவாத கும்பலிடம் மாட்டி மூச்சுத்திணறி வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் மதசார்பற்ற சக்திகள் சேர்ந்ததால் பிஜேபி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜேபி வாஷ் அவுட் என்ற நிலை ஏற்படும். 37 சதவீத வாக்குகளை பெற்ற பிஜேபி ஆட்சியை பிடித்தது.
63 சதவீத மக்கள் பிஜேபியை எதிர்த்து வாக்குகளை பிரித்து போட்டு விட்டார்கள். தமிழ்நாட்டில் அமைந்தது போல மற்ற மாநிலங்களில் கூட்டணி ஏற்படவில்லை. ராகுல்காந்தி இந்தியா முழுவதிலும் பெரிய கூட்டணி அமைக்க வேண்டும்.
கலைஞர் மறைந்த நேரத்தில் அவர் விரும்பிய இடத்தில் அடக்கம் செய்ய எடப்பாடி அரசு அனுமதி அளிக்கவில்லை. பிரதமர் மோடி அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னார்கள். அவர்களிடத்திலும் எடுத்து சொன்னோம்.பார்க்கிறோம் பார்க்கிறோம் என்று சொன்னார்களே தவிர இம்மியளவும் உதவி செய்யவில்லை.கலைஞருக்கு 6 அடி கொடுக்க மறுத்த கயவர்களுக்கு தமிழ்நாட்டில் இனிமேல் இடம் கொடுக்க கூடாது. என்றும் தெரிவித்தார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களான வீரமணி, வைகோ , காதர் மொகிதீன்பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu