பாடல் வரிகளை கொண்டு எஸ்.பி.பி. ஓவியம் - சேலம் இளைஞர் அசத்தல்!

பின்னணி பாடகர் எஸ்.பி.பி-யின் 1270 பாடல்களை கொண்டு அவரது உருவப்படத்தை, சேலத்தை சேர்ந்த இளைஞர் ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.

சேலம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் குமரேசன். சமையல் கலை பட்ட மேற்படிப்பை படித்த இவர், சேலத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வருகிறார். ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர், பல்வேறு ஓவியங்களை படைத்துள்ளார்.

குறிப்பாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வாசகத்தை கொண்டு, அவரின் உருவத்தை ஓவியமாக வரைந்து சாதனை படைத்துள்ளார். மேலும், இளையராஜாவின் இசையமைப்பில் பொன்மாலை பொழுதில் என்ற பாட்டின் அனைத்து வரிகளைக் கொண்டு, இளையராஜா உருவப்படத்தை வரைந்துள்ளார்.

இந்த நிலையில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளையொட்டி, அவர் பாடிய 40000 பாடல்களில், மிகப்பிரபலமடைந்த 1270 தமிழ் பாடல்களின் முதல் வரியை கொண்டு, எஸ்.பி.பி.யின் உருவத்தை தத்ரூபமாக மைக்ரோ ஆர்ட் மூலமாக வரைந்துள்ளார்.

இதுகுறித்து குமரேசன் கூறியதாவது: சிறுவயதில் இருந்தே ஓவியத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. எஸ்பிபி மீது அளவு கடந்த பற்று கொண்டவன். அவரது பிறந்தநாளில், அவர் பாடி ஹிட் ஆன, 1270 பாடல்களைக் கொண்டு மைக்ரோ ஆர்ட் முறையில், 10 மணி நேரத்தில் இந்த ஓவியம் வரைந்துள்ளேன் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!