சேலம் வ.உ.சி. மார்க்கெட் கடைகள் நாளைமுதல் சுழற்சி முறையில் செயல்படும்
நாளை முதல் பூ மார்க்கெட் திறக்கப்பட உள்ளதால் பூ மார்க்கெட் தூய்மைப்படுத்தும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டார்
சேலம் மாநகராட்சி போஸ் மைதானத்தில் தற்காலிக வ.உ.சி. மார்க்கெட் இயங்கி வந்தது. ஊரடங்கு காரணமாக, போஸ் மைதானத்தில் இயங்கி வந்த தற்காலிக 326 பூக்கடைகள் மற்றும் 27 பூ மாலை கடைகள், 50 தற்காலிக தரை கடைகள் என மொத்தம் 403 கடைகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால், தற்காலிகமாக செயல்பட்ட வ.உ.சி.மார்க்கெட்டை, உடனே செயல்பட்டுக்கு கொண்டு வரவேண்டுமென பல்வேறு தரப்பு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, நாளை முதல் சுழற்சி முறையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனப்டி, 326 பூக்கடைகளில் 163 கடைகள் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்கிழமை, வியாழக்கிழமைகளிலும்; மற்ற 163 கடைகள் திங்கட்கிழமை, புதன் கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களிலும் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக தரை கடைகள் 50 உள்ளன. இதில் நாளொன்றுக்கு 25 கடைகள் சுழற்சி முறையில் இயங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று வ.உ.சி. மார்க்கெட் செயல்படாது; வ.உ.சி. மார்க்கெட்டில் விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள விற்பனையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என, சேலம் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகளை பின்பற்றி, கூட்ட நெரிசல் இல்லாத வகையில் மார்க்கெட் செயல்பட விற்பனையாளர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu