வீடுகளுக்கே சென்று நடமாடும் பரிசோதனை: சேலம் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
சேலம் அம்மாபேட்டை பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் கிறுஸ்துராஜ் பார்வையிட்டார்
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 1,200 களப்பணியாளர்கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று குடியிருப்போர் அனைவரின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வதோடு, சளி மற்றும் காய்ச்சல் போன்ற கொரோனா நோய் அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் விபரங்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரிவித்து உடனடியாக நடமாடும் பரிசோதனை வாகனங்கள் வாயிலாக அறிகுறி உள்ளவர்களின் இல்லங்களுக்கே சென்று சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 60 நடமாடும் சளி தடவல் பரிசோதனை வாகனங்கள் இப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது தினந்தோறும் சராசரியாக 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களும், சளி தடவல் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. நடமாடும் சளி தடவல் பரிசோதனை வாகனங்கள் வாயிலாக இதுவரை 26 ஆயிரத்து 715 நபர்களுக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆயிரத்து 194 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் அம்மாப்பேட்டை மண்டலம் ஜோதி டாக்கீஸ் அருகில் நடமாடும் பரிசோதனை வாகனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட சளி தடவல் பரிசோதனையை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள சளி தடவல் பரிசோதனை மையம் அல்லது காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களுக்கு தாங்களாகவே சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆணையாளர் அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu