காற்றில் பறந்த சமூக இடைவெளி: ரேஷன் கடையில் பொதுமக்கள் தள்ளுமுள்ளு
சேலம் முள்ளுவாடி அம்பேத்கர் தெருவில் உள்ள நியாயவிலைக்கடையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, பொருட்களை வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள முள்ளுவாடி அம்பேத்கர் தெருவில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பாமாயில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொருட்களை வாங்க, அதிகாலை 4 மணி முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
குறைந்தளவு பொருட்கள் இருப்பதால் விரைவில் தீர்ந்துவிடும் என்று நினைத்து, பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு பொருட்களை வாங்க முற்பட்டனர். இதனால் பொதுமக்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். இருப்பினும் பொதுமக்கள் கேட்காமல் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டனர்.
இதனால், ரேஷன் கடையை அடைத்து பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது தொடர்ந்து பொதுமக்களை வரிசையில் நிற்க வைக்க முடியாமல் திணறிய போலீசாரால், டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது டோக்கன் வாங்குவதற்கும் அங்கிருந்த பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து டோக்கன் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், அனைவரையும் வரிசையில் ஒழுங்குபடுத்திய பிறகு, கடை திறக்கப்பட்டு பாமாயில் வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு நாளை மறுநாள் பாமாயில் வழங்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். நியாய விலைக்கடையின் முன்பாக பொருளை வாங்க, பொதுமக்கள் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காமல், ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு நின்றதால் நோய்தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu