சேலம் மாநகராட்சி தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனோ பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் வீட்டில் உடனிருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று நபர்களுக்கு மேல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதி, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் முழு அளவில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப்படுவதோடு தேவையான மருந்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ தேவைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக அலுவலர்கள் விவரம் மற்றும் தொலைப்பேசி எண்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது 75 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் மண்டலத்தில் 12 பகுதிகளும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 32 பகுதிகளும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 11 பகுதிகளும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 20 பகுதிகளும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 1886 நபர்கள்தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.சூரமங்கலம் மண்டலம் தர்ம நகர் மூன்றாவது குறுக்குத்தெருவில் தடைசெய்யப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கண்காணிப்பு பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கிறுஸ்துராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை உடனுக்குடன் வாங்கி வழங்கவும், அப்பகுதியில் எந்தவொரு நபரும் கொரோனா தொற்றால் பாதிக்காதவாறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu