மருத்துவ பணிக்காலம் நீட்டிப்பு : பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
பயிற்சி மருத்துவர்களுக்கான பணிக்காலத்தை திடீரென நீட்டிப்பு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் பயிற்சி மருத்துவர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்து நான்காண்டுகள் முடிந்தபின்னர் கடந்த ஓராண்டாக அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு பணிநிறைவு சான்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் 2016ஆம் ஆண்டு மாணவர்கள் பயிற்சி முடிக்கும்வரை தற்போது உள்ள பயிற்சி மருத்துவர்கள் பணி நீட்டிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் பணியை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் இந்த உத்தரவால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், கடந்த ஒரு ஆண்டாக குறைந்த ஊக்கத்தொகை பெற்றுக்கொண்டு மருத்துவ சேவை செய்து வந்த தங்களை மருத்துவ அலுவலராக நியமித்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் இந்த உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், இருப்பினும் மருத்துவ சேவையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் தங்களின் போராட்டத்தை தொடர உள்ளதாகவும் பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu