சேலத்தில் வாலிபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரி கத்திக்குத்து: நள்ளிரவில் பரபரப்பு
மருத்துவமனையில் தீவிரி சிகிச்சையில் உள்ள வாலிபர்.
சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்லதுரையை கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலரின் கணவர் பழனிச்சாமி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த பதினைந்து பேர் கும்பல், கிச்சிப்பாளையம், பாரதி நகர், ஹவுசிங் போர்டு பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த செல்லதுரையின் ஆதரவாளர்கள் சிலரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கினர்.
இதில் கத்திக்குத்து பட்ட நான்கு பேர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். அலறல் கேட்டு அந்த பகுதியில் மக்கள் திரண்டதால், கொலைவெறி தாக்குதல் நடத்திய 15 பேரும், கத்தி, வீச்சரிவாளை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனையடுத்து சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த செல்லதுரையின் ஆதரவாளர்களான மணி, பிரதாப் , வினோத் மற்றும் 17 வயது சிறுவன் உதயா ஆகிய 4 பேரையும் அப்பகுதியினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில் 2 பேர் உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிச்சிப்பாளையம் போலீசார், கத்தி மற்றும் வீச்சரிவாளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து, நள்ளிரவில் கொலைவெறி தாக்குதல் நடத்திய 15-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக ரவுடி செல்லதுரையின் ஆதரவாளர்களை கொலை செய்யும் நோக்கில் அதிமுக கவுன்சிலரின் கணவர் பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தான் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி கத்தி மற்றும் வீச்சரிவாளால் வெட்டியதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து கிச்சிபாளையம் போலீசார் தாக்குதல் நடத்திய கும்பல் யார் ? எதற்க்காக தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வாலிபர்களை ஓட ஓட வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu