தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தயார் - பாஜக துணைத் தலைவர்
கூட்டத்தில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம்.
சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், 'இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம்' என்ற தலைப்பிலான மக்கள் தொடர்பு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் நலன் சார்ந்த மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களிடையே தெரிவிக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு தொண்டரும் குறைந்தபட்சம் ஐம்பது பேரையாவது சந்தித்து மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனையடுத்து பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறும்போது, உள்ளாட்சி தேர்தலுக்கு நிர்வாகிகள் அனைவரையும் தயார் படுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் பாஜக சார்பில் அதிக உறுப்பினர்களை வெற்றி பெற வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும் டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம். நாட்டின் வளர்ச்சிக்காக விலையேற்றம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் வைத்தே சாமியை வழிபடுவதற்கு அரசு அனுமதி தேவையில்லை. இது அரசின் சர்வாதிகார போக்கைக் காட்டுகிறது. பள்ளி, கல்லூரி, டாஸ்மாக் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி தின ஊர்வலங்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏற்புடையது அல்ல. அரசு கட்டுப்பாடுகள் விதிக்கலாமே தவிர தடை விதிக்க கூடாது. தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த பாஜக தயாராக உள்ளது என்றார்.
மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும்தான். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியினர் மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பி வருகின்றனர். இந்த அவதூறுகளை பொதுமக்களிடம் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி பாஜக நிர்வாகிகள் விளக்குவார்கள் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu