நான்கு கோடி மோசடி: நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஓட்டுநர்கள் சேலம் எஸ்.பி.,யிடம் புகார்

நான்கு கோடி மோசடி:  நூற்றுக்கும் மேற்பட்ட  ஒப்பந்த ஓட்டுநர்கள் சேலம் எஸ்.பி.,யிடம் புகார்
X

நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஓட்டுநர்கள் சேலம் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர்.

பணி நிரந்தரம் செய்து தருவதாக கூறி நான்கு கோடி ரூபாய் மோசடி: நடமாடும் மருத்துவமனை ஒப்பந்த ஓட்டுநர்கள் சேலம் எஸ்.பி.,யிடம் புகார்.

நடமாடும் மருத்துவமனை ஒப்பந்த ஓட்டுநர்களிடம் ரூபாய் நான்கு கோடி அளவில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 389 நடமாடும் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஓட்டுநர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க சேலத்தை சேர்ந்த நடமாடும் மருத்துவமனை வாகனம் ஓட்டுனர்களான பார்த்தசாரதி மற்றும் வெற்றிவேல் ஆகியோர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிவரும் ஒப்பந்த ஓட்டுனர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் முதல் 3 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நபரான அம்மாசி என்பவரின் பெயரை பயன்படுத்தி ஒவ்வொரிடமும் பணம் பெற்றதாக கூறும் இவர்கள், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தற்போதைய முதலமைச்சரிடம் கூறி பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் இது தொடர்பாக எந்தவித அலுவல் நடவடிக்கையும் இல்லாத நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மோசடி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil