சேலத்தில் ரேஷன் கடையில் கொரோனா டெஸ்ட்! பொருட்கள் வாங்க வந்தவர்கள் பீதியில் ஓட்டம்...

சேலம் கிச்சிப்பாளையத்தில், ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மாநகராட்சியினர் கட்டாய கொரானா பரிசோதனை நடந்தது. இதனால், பொருட்கள் வாங்க வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

சேலம் மாநகரில், பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த, அவ்வப்போது மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், விதிமுறையை மீறி வெளியே வந்த நபர்களுக்கு கட்டாயமாக கொரானா பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சேலம் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்கள் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக பொருட்களை வாங்க வரிசையில் நிற்பது வாடிக்கையாகிவிட்டது.

இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர் பலமுறை எடுத்துக் கூறியும் பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைவரும் கட்டாயம் கொரானா பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு செய்து, அதற்காக இன்று சேலம் மாநகராட்சி ஊழியர்கள் தயாராக காத்து இருந்தனர்.

அப்போது ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்களை அழைத்து அவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்தனர். இதனால் பொருட்களை வாங்க வந்தவர்கள், ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் ஒருசிலர் பரிசோதனை செய்துகொண்டு பொருட்களை பெற்று சென்றனர்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இத்தகைய நடவடிக்கை எடுப்பதாக, மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. அத்துடன், எவ்வளவுதான் நடவடிக்கை மேற்கொண்டாலும், பொது மக்கள் மனது வைத்து ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே, கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதே உண்மை.

Tags

Next Story
why is ai important to the future