செல்போன் டவர் அமைப்பதாகக்கூறி ரூ.7 லட்சம் மோசடி: 13 பேர் அதிரடி கைது

செல்போன் டவர் மோசடியில் கைதான 13 பேர் கொண்ட கும்பல்.
சேலம் மாவட்டம், சித்தனூர் பகுதியை சேர்ந்த சகாயமேரி என்பவருக்கு கடந்த மாதம் 27ம் தேதி இன்சைட் டவர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியை பார்த்து உண்மை என நம்பி குறுஞ்செய்தி வந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர், தங்களுடைய நிலத்தில் செல்போன் டவர் அமைத்து அதற்காக மூன்று லட்ச ரூபாய் முன்பணமாகவும் மாதந்தோறும் 35 ஆயிரம் தருவதாக கூறி உள்ளனர்.
மேலும் இந்த செல்போன் டவர் அமைக்க சுமார் ஏழு லட்சம் வரை செலவாகும். அந்தப் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய சகாயமேரி அந்த நிறுவனத்தின் பல்வேறு வங்கி கணக்கில் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த எண்ணில் சகாயமேரி தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்துவிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பலமுறை தொடர்பு கொண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இந்த மோசடி குறித்து மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை காவல்துறையினருக்கு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்ற தனிப்படையினர் அங்கு தனிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் படியான ஒரு கும்பல் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தமிழகம் முழுவதும் குறுஞ்செய்தி மூலம் செல்போன் டவர் அமைத்து தருவதாகக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து திருப்பூரைச் சேர்ந்த மல்லையா, சந்திரசேகர், நவீன், சுதாகரன், டெல்லியைச் சேர்ந்த சிவா, சூர்யா, திண்டுக்கல்லைச் சேர்ந்த தனசேகர், மோகன், பிரபு, குணசேகரன், சௌந்தரபாண்டியன், அருண்குமார், சதீஷ்குமார் ஆகிய 13 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 2 லேப்டாப், 34 செல்போன், 45 சிம்கார்டுகள், 20 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
செல்போன் அமைத்து தருவதாக நூதன மோசடியில் ஈடுபட்டு மக்களிடம் அதிக பணம் பறிக்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu