மருத்துவரிடம் செல்போனில் ஆலோசனை பெற செயலி! அசத்தும் சேலம் மாநகராட்சி

மருத்துவரிடம் செல்போனில் ஆலோசனை பெற செயலி! அசத்தும் சேலம் மாநகராட்சி
X
சேலம் மாநகராட்சி பகுதிகளில், வீட்டில் இருந்தே செல்போனில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற ஏதுவாக, வி - மெட் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

கொரோனோ தொற்று காலத்தில், பொதுமக்கள் தங்களது வீட்டிலிருந்தே கைப்பேசி செயலி வாயிலாக மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று, சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் சேலம் மாநகராட்சி சார்பில் புதிய வி – மெட்(V-Med)செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

வி - மெட் ஆண்ட்ராய்ட்டு மருத்துவ செயலியை பயன்படுத்தி மருத்துவரின் ஆலோசனைகளை பெறலாம். மருத்துவருடன் காணொலி வாயிலாக கலந்தாலோசனை மேற்கொள்ளலாம். நோயாளிகள் கைப்பேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் போது, மருத்துவர்கள் செயலி வாயிலாக தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை வழங்குவர்.

சிகிச்சை முறைகள் குறித்து காணொலி மூலம் நோயாளிகளுக்கு மருத்துவர் எடுத்துரைப்பார். காணொலி நிறைவடைந்தவுடன் மருத்துவர், மருத்துவக்குறிப்பினை தயார் செய்து, நோயாளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பி வைப்பார். அதன் அடிப்படையில், நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாம்.

சேலம் மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை, காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, மாநகராட்சியில் உள்ள இரண்டு மருத்துவர்களால் வழங்கப்படும். தொடர்ந்து மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள், இத்தொலைதூர மருத்துவ சேவையில் இணைக்கப்பட உள்ளனர்.

பொதுமக்கல் தங்களது செல்போனில், Salem Corporation V- med என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு மாநகராட்சி ஆணையாளர் இரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story