போலீசார் பைக் தர மறுப்பு; இளைஞர் எடுத்த திடீர் முடிவால் பதற்றம்
விளம்பர பாதாகை மீது ஏறி போலீசாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்.
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த சரவணன்(36) என்ற இளைஞர் தனது உறவினரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கன்னங்குறிச்சி வழியாக சென்று கொண்டிருந்தார். வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இளைஞரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கு அபராதம் விதித்து வாகன ஆவணங்களை காவல்துறை கேட்டபோது, உறவினர்கள் வாகனத்தை எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
பின்னர் உறவினர் வீட்டிற்கு இளைஞர் சென்று வாகனத்தின் ஆவணங்களை எடுத்து வந்த நிலையில் காவல்துறையினர் வாகனத்தைத் தராமல் அலைக்கழித்தாக கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விளம்பர பதாகை வைக்கும் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் தராமல் தன்னை அவமானப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாக கூறி இறங்க மறுத்து தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.
பின்னர், வேறு வழியில்லாமல் சேலம் மாநகர துணை ஆணையாளருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த மாநகர துணை ஆணையர் வேதரத்தினம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞரை சமாதானப்படுத்தி பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் இருசக்கர வாகனத்தை இளைஞருக்கு வழங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டித்து அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu