சேலம் மாநகராட்சி அலுவலகத்தின் 2-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற ஊழியரால் பரபரப்பு..!
சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர், மாநகராட்சி அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், மாநகராட்சி ஆணையாளருக்கு உதவியாளராக பணிபுரிவதற்கு அருளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அந்த பணியை அவர் கட்டாயம் செய்ய வேண்டும் என்று பொதுப்பிரிவில் பணிபுரியும் கிளார்க் ஒருவர் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த பணியை செய்ய முடியாது என்றும், தான் பொறியியல் பிரிவில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு மாநகராட்சி ஆணையாளருக்கு உதவியாளராக பணிபுரிந்து ஆகவேண்டும் என்று அவரை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அருள் நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்தில் 2-வது மாடியில் இருந்து குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சக ஊழியர்கள் அருளை தடுத்து காப்பாற்றினர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் அவர் விசாரணை நடத்தி வருகிறார். கட்டாய பணி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாநகராட்சி ஊழியர் 2 ஆவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற சம்பவம் மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu