இரண்டாம் நிலை பெண் காவலர் உடல் தகுதி தேர்வு

இரண்டாம் நிலை பெண் காவலர் உடல் தகுதி தேர்வு
X

திருநங்கை ரூபா.

சேலத்தில் இரண்டாம் நிலை பெண் காவலர் உடல் தகுதி முதற்கட்ட தேர்வில் பங்கேற்ற திருநங்கை தேர்ச்சி பெற்றார்.

சேலம் குமரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 460 பெண்கள் பங்கேற்ற நிலையில் ஓட்டபந்தயம், உயரம் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் காதப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரூபா என்ற திருநங்கை பங்கேற்று உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் சக தேர்வர்கள் ஆகியோர் திருநங்கை ரூபாவிற்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினர். மற்ற திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக காவலர் உடற்பயிற்சி தேர்வில் பங்கேற்க வந்த ரூபாவிற்கு பாராட்டு தெரிவித்தனர்.

கட்டிட பொறியாளர் பட்டம் பெற்ற தான் தனது பெற்றோரின் வழிகாட்டுதல்படி அரசுப்பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தில் காவல்துறை தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்ததாக ரூபா தெரிவித்தார். தன்னைப்போன்ற திருநங்கைகளுக்கு ஏற்கனவே உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்ட பிரித்திகா யாஷினி ஒரு முன் உதாரணம் என்று திருநங்கை தெரிவித்தார்.

Tags

Next Story