பெரியார் சிலையிடம் மனு: சேலத்தில் இந்திய மாணவர் சங்கம் நுாதன ஆர்ப்பாட்டம்
பெரியார் பல்கலைக்கழகத்தில் மதவாத கருத்துக்களை திணிக்க முயற்சிக்க ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் பெரியார் சிலையிடம் மனு.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள கலைஞர் ஆய்வு மையத்தில் நேற்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் வேதசக்தி வர்மக்கலையும் பண்பாட்டு பின்புலமும் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சொற்பொழிவு நிகழ்விற்கு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழகப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உத்தரவிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சொற்பொழிவு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மதவாத கருத்துக்களைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபடும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பேராசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியாரின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் பெரியாரின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான செயல்பாடுகளில் துணைவேந்தர் ஈடுபடுவதாகவும், பெரியார் வழியில் பிற்போக்கு கருத்துகளை எதிர்த்து சமூக நீதிக்காகப் பாடுபட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு மையத்தில் அறிவியல் அல்லது தற்காப்பு என்ற பெயரில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியது என்று ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu