சேலத்தில் தாரை தப்பட்டையுடன் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள சேலம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பெரியாரின் உருவப்படம் பெரிதாக வைக்கப்பட்டு, அவரின் படத்திற்கு முன்பு தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தாரை தப்பட்டை, கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற பல்வேறு நடன கலைஞர்கள் கலந்து கொண்டு இசைக்கு ஏற்றவாறு நடனமாடினர்.
தொடர்ந்து பெரியாரின் உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரியாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திரளாக பங்கேற்ற இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து துணை ஆட்சியர்கள் உதவி ஆட்சியர்கள் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் வரை பங்கேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு பகுத்தறிவை வளர்த்து சாதியை ஒழித்து அனைவரும் சமூக நீதியை நிலைநாட்டுவோம் என ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பெரியாரின் தத்துவங்கள், பெண் உரிமைக்கான போராட்டங்கள், சமூகநீதி கருத்துக்கள் மற்றும் பெரியாரின் பொன்மொழிகள் அடங்கிய புகைப்படங்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இதேபோல் சேலம் மாவட்ட திமுக அலுவலகத்தில் சமூக நீதி நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு உறுதி மொழியை வாசிக்க கட்சி நிர்வாகிகளும் அதனைச் திரும்ப வாசித்தனர்.
இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்பையடுத்து இன்று அரசியல் கட்சியினர் முதல் அரசு அலுவலகம் வரை பெரியார் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu